அத்தியாயம் 3

Nilaprakash

Administrator
Staff member
அத்தியாயம் 3

டேனியல் பதிலை கேட்டவுடன் எலன் அதிர்ச்சி ஆக அவனை நோக்கினான். ஏலனின் ஆச்சரியத்திற்கு காரணம் ஏலனும் டேனியும் ஒரு பன்னாட்டு வர்த்தக மீட்டிங் ல் நண்பர்கள் ஆனார்கள். இருவரும் இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர் என்பதால் புதுமையான கருத்துகளில் ஒத்து போய் பரஸ்பரம் நண்பர்கள் ஆனார்கள்.ஆனால் டேனி ஒரு முறை கூட தன் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பற்றி கூறவில்லை.டேனி ஒரு வித பதட்டத்துடன் அதை சமாளித்தான்

“ யூ நோ அபவுட் இந்தியன் அரெஞ்ட் மேரேஜ்”.

எலன் ரிச்சர்ட் இருவரும் அவனுக்கு வாழ்த்து கூறி கை குலுக்கி விட்டுச் சென்றனர்.அவர்கள் சென்றவுடன் டேனி சற்று நேரம் தன் மன ஓட்டங்களின் முடிவுகளை நினைத்து ஆச்சர்யபடுவதா இல்லை அவஸ்தை படுவதா எனத் தெரியாது சில மணித்துளிகள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

டேனிக்கு திருமணம் நிச்சயம் ஆகவில்லை.அவனுக்கு உறவுகளில் பெரிதாக நம்பிக்கை இல்லை.அவன் தாய் பல முறை திருமணத்திற்கு வற்புறுத்தியும் அதில் அவன் ஈடுபாடு காட்டியதில்லை.
ரிச்சர்ட் பற்றி எலன் குறிப்பிட்ட நிகழ்வுகள் பல அவன் நினைவில் வர திருமணம் விவாகரத்து சகஜம் என்கிற மேலை நாட்டில் கூட அவரின் முப்பத்தைந்து வருட திருமண வாழ்க்கை பரஸ்பர நம்பிக்கை இதெல்லாம் நினைவு வரவும் அவர் கமிட்மென்ட் என்றதும் சட்டென இந்த பொய் ??
அவன் மனம் நெருடியது . தொழிலில் சில சமயங்களில் பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த நன்மை தரும் என்பது போல் பொய்கள் பேசுவான் தான் ஆனால் தன் கனவு திட்டத்தை தொழில் முனைப்பை ஒரு பொய்யுடன் ஆரம்பிப்பது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

சற்றே குழப்பமான மனநிலையுடன் தன் காரில் ஏறி பயணமானான்.அதே சமயம் ரியா ஒரு சந்தோஷ துள்ளலுடன் அந்த கனடா எம்பஸி பில்டிங் லிருந்து வெளிவந்தாள்.வெளியில் கௌதம் காத்திருந்தான்.அவனைக் கண்டவுடன் கை குலுக்கி

“ ஸ்டூடன்ட் விசா சீக்கிரம் ப்ரோஸீட் ஆகிரும் னு நினைக்கிறேன் ..”
என்று சொல்லி முறுவலித்தாள்.

கௌதம் அவளிடம் ட்ரீட் கேட்க இருவரும் அருகில் ஒரு காபி ஷாப் ஐ நோக்கி பயணித்தனர்.ரியா அந்த சாலையில் தான் காலையில் பார்த்த அதே இளைஞனைக் கண்டாள். கார் ஏதோ பழுது போலும் நடு சாலையில் நின்றிருந்தது. யாரிடமோ ஃபோனில் பேசியபடியே நின்றிருந்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி நினைவுக்கு வர புன்னகைத்தாள் .

ரியாவும் கௌதமும் அந்த காபி ஷாப் ல் நுழையும் அதே சமயத்தில் டேனி சற்று கோபமாகவே செல்பேசி யில் கத்திக் கொண்டு இருந்தான்.

” நான் உடனே வரனும் னா எப்படி‌? சாயங்காலம் பையர்ஸ் மீட்டிங் நீங்க சமாளிக்க மாட்டீங்களா சரவணன் ? “
அவன் குரலில் சினமிருந்தது .அந்த பக்கத்தில் இருந்து என்ன பதில் வந்ததோ தெரியவில்லை அவன் மேலும் எரிச்சலுற்று

“ ஆறு மணிக்கு தானே வரேன் “

என்று சொல்லி காரை பார்த்தான்.
ரிச்சர்ட் இடம் தான் சொன்ன அந்த சிறு பொய் தன் உழைப்பை தன்னம்பிக்கை யை கேலிக் கூத்தாக்கியதை எண்ணியபடியே வந்தவன் அந்த மேம்பால சாலை ஒர தடுப்பு சுவரில் சற்றே உரசியிருந்தான் வண்டி எடுப்பதற்குள் சாலை ஓர போலீசார் வர தன் டிரைவரை வரச் சொல்லி விட்டு காத்திருக்கையில் இப்படி ஒரு அழைப்பு.

இது மைக்கேலினால் சமாளிக்க கூடிய பிரச்சினை தான் இருந்தாலும் அவர் டேனி யை வழிக்கு கொண்டு வர வேண்டுமே . டேனிக்கு புரிந்தது இனி ஒவ்வொரு பிரச்சினை ஆக உருவாகும் தன் தனிப்பட்ட தொழிலை தொடங்க விடாது அத்தனை தொந்தரவு களையும் தன் தகப்பனே கொடுக்க துவங்குவார் . டேனி அதை எதிர்பார்த்தே இருந்ததால் அப்போதே சென்னை டூ மதுரை விமான டிக்கெட் ஆன்லைன் ல் புக் செய்து விட்டு கிளம்பினான்.

காபி ஷாப் ல் ரியாவும் கௌதமும் பேசிய படி அமர்ந்திருந்தனர்‌. ரியா கனடா போகிற தன் சந்தோசத்தை விவரிக்க அதை புன்னகையுடன் ரசித்து கொண்டு இருந்தான் அவள் நண்பன்.கிட்டதட்ட அரை மணி நேர அவளின் பல்கலைக்கழகம் படிப்பு வேலை என அத்தனை பேச்சுக்கு பிறகு கௌதம் கை தூக்கினான்

“ சத்தியமா இதுக்கு மேல என்னால முடியாது ..மனுசியாடி நீ காதில இரத்தம் வருது “

அவனின் கேலி பேச்சுக்கு “ பொறாமை நீ போகல னு “ என்றாள் ரியா.

கௌதம் சிரித்தப்படி அவளை பார்த்து

“ நான் ஒரே விஷயத்துக்கு வேணா பொறாமை படலாம் …அங்கே இருக்கற ஃபிகர் கள்..ம்ம்ம்"

என்றான் . ரியா முறைத்தாள்.

“ ஜோக்ஸ் அபார்ட்..ரியா மூன்று வருஷம் படிப்பு ன்ற அங்கிளையும் ஆன்டியையும் மெண்டலி ப்ரீப்பேர் பண்ணிட்டியா ..நீ போனதும் அந்த தனிமையை மேனேஜ் பண்ணிக்குவாங்களா ?”

கௌதமின் இந்த கேள்வி ரியா வின் முகத்தில் வாட்டத்தைக் கொடுக்கவும் அதற்கு மேல் அதை பற்றி பேசாது இருவரும் கிளம்பி வீடு வந்தனர
ரியாவுக்கு அன்றைய இரவு உறக்கமின்றி கண்ணீரோடு கழிந்தது . கௌதமின் தாய் இரவு உணவு சாப்பிட அழைத்தும்

“ வேண்டாம் ஆன்டி வயிறு ஃபுல் ஆ இருக்கு”

என்று சொல்லி உறங்கச் சென்றாள்.கௌதமின் தாய் அவனை கேள்வியோடு நோக்கவும் விட்ருமா என்பது போல் சைகை செய்தான்.
அவள் அறையை விட்டு நகர்ந்து நேராக கௌதமிடம் வந்தாள் தாய் லதா

“ என்னாச்சு டா சண்டையா ஏதாவது திட்டினாயா ?"

“ மா ..நான் திட்டினதுக்கு எல்லாம் அவ மதிக்கவே மாட்டா மா ...போடா எருமை னு போய்ட்டே இருப்பா"

அவனின் அந்த பதில் லதாவுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது தான் நினைத்தப்படி இவர்கள் மணமக்கள் ஆக வாய்ப்பே இல்லை ஒருவனின் கோபமோ மகிழ்ச்சியோ ஒரு பெண்ணை பாதிக்கவில்லை என்றால் அவளின் மனதில் அவன் காதலனாக இல்லை .
தன் ஏமாற்றத்தை மறைத்தபடி

“ அப்பரம் என்னடா ..”

தன் தாயை வித்தியாசமாக பார்த்து விட்டு

“ மா உனக்கு தெரியாதா மா அவ வீட்ட பத்தி..அவ அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு..பெரிசா சொந்தக்காரங்க சப்போர்ட் எல்லாம் இல்ல ..அவ இன்னும் பத்து நாள் ல கனடா கிளம்பறா ..அவங்க அப்பா அவள விட்டு பிரிய முடியாதுங்கறதுக்காகவே ஸ்கூல் காலேஜ் எதுக்கும் ஹாஸ்டல் லைவ் கிடையாது ..இப்ப இதை எப்படி எடுத்துக்க போறாங்க னே தெரியல ..நீ தான் பார்த்த ல .‌சென்னை ல நம்ப வீட்ல இருக்கவே எத்தனை ஃபோன்..மோர்ஓவர் அவ இங்க தான் அழ முடியும் மா ..அங்க போய் அழுதா ..‌மொத்தமும் க்ளோஸ் இங்கேயே படி னு சொல்லிருவாங்க”

“ ஏன்டா கௌதம் நீ கனடா தான் செலக்ட் ஆகிருக்க .. அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தான …நான் அவள பத்திரமா பார்த்துக்கறேன் னு"

தன் தாயின் மனநிலையை படித்தவனாக

“ மா ..திருந்தவே மாட்டியாமா நீ.. உனக்கு எத்தனை தடவ சொல்றது ..அவ என்னோட ஃப்ரெண்ட் மா ..போய் படுமா ...நேரங் கெட்ட நேரத்துல கடுப்புகளை கிளப்பிட்டு ..நீ ஒரு அன்னை தெரசா அவ அன்னை தெரசா க்கு அன்னை தெரசா .‌உங்க ரெண்டு பேரையும் வைச்சு ஆதரவற்றோர் முதியோர் இல்லம் வேணாம் நடத்தலாம் .மாமியார் மருமகள் னு குடும்பம் எல்லாம் நடத்த முடியாது ..”

ஒரு விநாடி அதன் கற்பனை கண் முன்னாடி வந்து போக

“ கர்மம் கர்மம் .. போய் தூங்கு மா"

என்று சொல்லி தன் தாயை வெளியே தள்ளினான்.

“ உனக்கு எல்லாம் சொர்ணாக்கா பொன்டாட்டி யா வரும் போது தான்டா தெரியும் ஒழுங்கா அம்மா பேச்சை கேட்ருக்கலாம் னு"

என்று திட்டிய படியே உறங்கச் சென்றாள் லதா.
 
Back
Top