ராஜ்ஜியம் - 7
அறிவுமதி ஃபோனில் பேசி முடித்து விட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.
“மாக்கிளம்பறேன் ”
“சாப்பிட்டு போ மதுமா !” அவரைப் பார்வையாலேயே துளைப்பது போல் ஒரு புன்னகை செய்து விட்டுத் திரும்பியவள்.
“என் வீட்ல வந்து செஞ்சு கொடு சாப்பிடறேன் ”அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் காதில் விழ அவள் சென்ற திசையைப் பார்த்துப் பெருமூச்செறிந்தார் குணசீலி.
“ஏன்மா நீ தான் அவ வீட்டுக்குப் போய்ட்டு வாயேன் ”
“உன்னை விட்டுட்டு தனியா எப்படி டி ?”
“அப்ப அவ மட்டும் தனியா இல்லையாமா ?” குணசீலி மகளைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாது நிற்க மதி அவளைக் கட்டிக் கொண்டு சொன்னாள்.
“அம்மா அவ ஊருக்கு டெரர் பீஸ்னாலும் உனக்குப் பொண்ணு தானே அவக் கூப்பிட்டா போய்ட்டு வாயேன் மா” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குணசீலியின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் திடுக்கிட்டவளாக மதி கேட்டாள்.
“மா உனக்குப் பிடிக்கலனா விடு. மது கேட்டானு தான் சொன்னேன்.”
“மதி நான் ஒரு நாள் அவ அப்பார்ட்மெண்ட்டுக்கு போனேன் ”குணசீலி அதற்கு மேல் பேசாது மென்று விழுங்கி மீண்டும் கூறினார்.
“கேட்லயே நிறுத்திட்டாங்க மதி ஏதேதோ கேட்டாங்க ஒண்ணும் தெரியலை. அவளுக்கு ஃபோன் பண்ணி சொல்றதுக்கு கூட அவமானமா இருந்துச்சு அதான் அவகிட்ட சொல்லல.”
“லூசாமா நீ அவளுக்கோ எனக்கோ கூப்பிட வேண்டியது தானே?”
“வேணாம் மதி நான் இப்படி போனா தான் மதிப்பாங்க உள்ளே விடுவாங்கனா அங்கே நான்போல மதி ”மதி தன் தாயை பரிவாக அணைத்து சொன்னாள்.
“மா அது செக்யூரிட்டி செக் அவ்வளவு தான் உனக்குச் சங்கடமா இருந்தா நானே உன்னைக் கூட்டிட்டு போறேன்மா ரெண்டு நாள் வேலை இருக்கு அப்பரம் கூட்டிட்டு போறேன.” குணசீலி சரியெனத் தலையாட்டிச் செல்ல மதிக்கு தன் அக்காவின் மேல் கோபம் வந்தது.
வா வா என்கிறாள் ஒரு நாள் அம்மாவைக் அவ கார்லயே கூட்டிட்டு போக வேண்டியது தானே!!! அதே நொடியே அதற்கான பதிலும் அவளது மனதை நெருடியது. தன் அக்காவுடைய பிஸியான வேலை. ஒரு வேளை அவள் ஓய்வாக இருக்கையில் தன் தாய் தன்னைக் காரணம் காட்டி வர மறுப்பது கண்டிப்பாகத் தன் தாயை ஒரு முறை அழைத்துச் சென்றே ஆக வேண்டும் மனதில் முடிவெடுத்து தனது சிறிய அறையில் நுழைந்தாள்.
மிகச் சிறிய அறை என்றாலும் மிக ஒழுங்காகப் பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.தன் கைப்பையை அதன் தாங்கியில் வைத்து விட்டு உடை மாற்றி உறங்கப் படுக்கையில் சாய்ந்தாள் மதி. அன்று அவளது நாள் முழுக்க அலைச்சல் வேலை அசதியெனக் கழிந்திருக்க அவளது மனம் சலிப்புற அப்போது தான் அவனது நினைவு தென்றல் போல் இதமாகத் தீண்டியது. இன்றைய நாளின் இயந்திர ஓட்டத்தில் புன்முறுவலுடன் நினைத்துக் கொள்ளும் ஒரு நினைவை அவளுக்குப் பரிசளித்து இருந்தான் அந்தப் புதியவன். அவள் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் உதித்தது. அவனது ரசனையான முகபாவம் பேச்சற்று நின்ற திடுக்கிடல் கோபமாகப் பேசி விடுவாளோ என்கிற பயம் அன்புமதி புன்முறுவலுடனே உறங்கிப் போனாள். ஆதவன் தன் கதிர்களை அந்தத் திரைச்சீலையின் சிறு விலகலில் முடியும் மட்டும் வீச முகத்தில் பட்ட அந்த ஒளியில் கண்களைத் தேய்த்துக் கொண்டே எழுந்தான் அபு.
“எப்படி பார்த்தாலும் இது நம்ம வீடு மாதிரி தெரியலையே.” அவன் மீண்டும் கண்களைத் தேய்க்க,
“அரைபோதை நாயே இது என் வீடு “கீழே அமர்ந்து இருந்த சூர்யா கண்களில் சிவப்புடன் சொல்லி விட்டு மெல்ல எழுந்தவன் கட்டிலிலிருந்து அபுவை ஒரு உதை விட அவன் அதைப் பெரிதாக மதிக்காது கேட்டான்.
“என்னடா நடந்துச்சு நான் எப்படி இங்க வந்தேன் ?”
“பெரிய சினிமா பட ஹீரோயின் மயக்கம் தெளிஞ்சு டயலாக் பேசுறாங்க குடிகார நாயே வீட்டையே நாறடிச்சு வைச்சு டயலாக் பேசற ”அபு தன் நண்பனைக் கண்டு மீண்டும் குழப்பக் கேள்வி கேட்டான்.
“நைட் நமக்குள்ள தப்பா எதுவும் நடந்திடலையே?” சூர்யா தன் பொறுமை அனைத்தையும் இழந்தவனாக
“டேய் “எனச் சத்தமிட்டு அவன்மேல் பாய அபு கட்டிலிலிருந்து குதித்து வெளியே ஓடி வந்தவன் மாலினி மீது மோதப் நின்றான்.
“மாலும்மா நீங்க இங்க.?” எலுமிச்சை சாறு உப்பு கலந்த பானத்தைக் கொண்டு வந்தவர் அவன் மோதுமாறு வருவதைக் கண்டு லாவகமாக அதைச் சிந்தாது பிடித்து நின்றார்.
“இன்னமும் சின்ன வயசு பசங்களாட்ட ஏன்டா அடிச்சுகுறீங்க பல் விலக்கிக் குளிச்சிட்டு இதைக் குடி ”மாலினி சொல்லி விட்டுச் செல்லப் பின்னாலிருந்து அவனைக் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடித்து முதுகில் அடித்தான் சூர்யா. திரும்பி அவன் முகத்தைப் பார்த்த அபு அப்பாவியாக முகம் வைத்துக் கேட்டான்.
“ஏன்டா கண் எல்லாம் சிவந்து கிடக்கு ஓவரா குடிக்காதேனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் மாலும்மா மனசு எவ்ளோ வருத்தப்படும்.”
அபு மாலினியை கைக்காட்டவும் ஹாலில் இருந்த மாலினி சிரித்துக் கொண்டே டிவியை ஆன் செய்ய அதில் அபு சூர்யாவின் அறையைத் தட்டிக் கொண்டே உளறுவது படமாகி இருந்தது.
“ஏ சமீ கதவைத் திறடி என்னைப் பார்த்தா பேச மாட்டியா பெரிய இவளாடி நீ அடியே… “ அபு திரையில் கத்திக் கொண்டு இருக்க சூர்யா தலையில் அடித்துக் கொண்டு கதவை நீக்கி அவனை இழுத்துச் செல்வது ஒரு முறை அல்ல பல முறைக் காட்சியாகப் பதிவாகி இருந்தது. அபு அதனைப் பார்த்ததும் சூர்யாவின் கண் சிவப்பு காரணங்கள் புரிந்து போனது.
“மாலும்மா இதெல்லாம் கிராபிக்ஸ் நம்பாதீங்க ”
“படம் பிடிச்சதே நான் தான்டா ”என்று சொன்ன மாலினி அவன் தலையில் கொட்டி விட்டு எழுந்து போக அபு அசடு வழிய எழுந்து பல் துலக்கிக் குளித்துச் சிறிது தொள தொளவென இருந்த சூர்யாவின் ஆடைகளோடு டைனிங் டேபிளில் அமர்ந்தான். சுட சுட ஆனியன் தோசை இட்லி காரச் சட்னி தேங்காய் சட்னியென இருவருக்கும் பிடித்த உணவுகளைச் சமைத்திருந்தார் மாலினி.
“ஹை காரச் சட்னி தேங்ஸ் மாலும்மா” அபு பசியிலும் அவர் பரிவிலும் இன்னும் இரு இட்லிகளை பிய்த்து உண்ண இருவரும் உணவு உண்பதைப் பார்த்துப் பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனார் மாலினி.
“அம்மா உனக்கு மாலும்மா மாதிரி இட்லிக்கு காரச் சட்னி செய்யத் தெரியாதா எப்ப பார்த்தாலும் கறிக் குழம்பு வைக்கிற ”அவன் சொல்ல மரியம் அவன் கன்னத்தில் இடித்துச் சொன்னார்.
“உன் மாலும்மா நல்லா தான் நாக்கு உணர்த்தியா வளர்த்து வைச்சுருக்கா இந்தா கறிக்குழம்பு சூர்யாவுக்கும், வில்லியமுக்கும் கொடுத்துட்டு வா ஏன் மாலினி உன்னாலேயே இவன் பத்து கிலோ ஏறிடுவான் போல.”
“காரச் சட்னிக்கு எல்லாம் உடம்பு ஏறாது கறிக் குழம்புக்கு தான் ஏறும்”
“எப்படி சப்போர்ட்டுக்கு வர்றான் பாரு “அபுவை இடிக்கக் கை ஓங்கிய மரியத்திடமிருந்து மாலினி அவனை இழுத்து அணைத்து
“விடுங்க அண்ணி ”மாலினியின் கண்களில் பழைய நினைவுகள் ஓடக் காலிங் பெல் சத்தம் அவரை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது. சாப்பிட்டுக் கொண்டு இருந்த சூர்யா எழ அவனைக் கையமர்த்தி விட்டு மாலினி ஹாலுக்கு சென்று கதவைத் திறந்ததும் விஷ்ணு வில்லியம் சத்தம் ஆச்சர்ய கத்தலில் கேட்டது.
“மாலும்மா நீங்க “இருவரும் அபு என்ன ஆனான் என்று பார்க்க வந்தவர்கள் மாலினி இருப்பதைக் கண்டு திகைப்பும் திகிலுமாகப் பார்த்தனர்.
“ஏன்டா ஜுராசிக் பார்க் டைனோசரைப் பார்த்த மாதிரி திகைச்சு நிக்குறீங்க “வில்லியம் தான் முதலில் சுதாரித்தான்.
“அது மாலும்மா உங்களைத் தீடிர்னு பார்த்தது தான். சுர்ஜித் அங்கிள் வந்து இருக்காரா?” இந்தக் கேள்வியில் விஷ்ணுவுக்கு லேசாக நெஞ்சு அடைப்பது போலிருந்தது. நேத்து அபு இருந்த நிலைக்கு என்னென்ன பண்ணித் தொலைஞ்சு இருக்கானோ இதில் சுர்ஜித் அங்கிளும் இருந்து இருந்தால்
“அவர் வரலை டா ”மாலினி சொல்லவும் விஷ்ணு நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“வாங்கடா உள்ள “மாலினி அவர்களையும் டைனிங் டேபிளில் அமரச் சொல்லி விட்டுத் தோசை வார்க்க சமையல் அறைக்குள் செல்ல விஷ்ணு வில்லியம் இருவரும் மிகுந்த பதட்டமாகச் சூர்யாவை நோக்கினர்.
என்னைப் பற்றி
நானே எழுதும் விமர்சனம்
என் நண்பன் !!!