ஆய்வு 5, 6

Nilaprakash

Administrator
Staff member
மருத்துவர் : ஆத்ம சுரங்கபாதை தாண்டி உங்களால் அனைத்தையும் தெளிவாக காண முடிகிறதா?
ஆய்வு நபர் 5 : நான் இன்னும் அதை கடந்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னை சுற்றி மேகத்திரள் இருக்கிறது.
மருத்துவர் 5 : நீங்கள் அந்தப் பாதையை கடந்து வெளிவந்து என்ன பார்க்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்?
ஆய்வு நபர் 5 : நான் ஆத்ம சுரங்கப்பாதையைக் கடந்து விட்டேன். இது மிகவும் அழகாக இருக்கிறது. இங்கே இருக்கும் காட்சிகள், ஏன் வாசம் கூட மிக அழகாக இரு. நான் பனிக்கட்டியினாலான ஐஸ் மாளிகையை பார்க்கிறேன்.
மருத்துவர் : மேலே சொல்லுங்கள்!
ஆய்வு நபர் 5 : இந்த மாளிகை முழுவதும் ஜொலிக்கும் படிகக் கற்களால் மின்னுகிறது. என்னைச் சுற்றியும் அது ஜொலிக்கிறது. (ஆச்சர்யத்துடன் சொல்கிறார் )
மருத்துவர் : படிகக் கற்கள் என்றால் நீங்கள் சொல்வது ஒரே நிறத்தை என்று நான் எடுத்துக் கொள்ளலாமா?
ஆய்வு நபர் 5 : இங்கே பெரும்பாலும் வெண்மையும் சாம்பல் நிறமும் தான் இருக்கிறது. ஆனால் இந்த மாளிகைக்குள் செல்ல செல்ல நான் இன்னும் சில நிறங்களை காண்கிறேன். அனைத்துமே சிறு சிறு படிகக் கற்களால் ஆன மொசைக் மாதிரி இருக்கிறது.
மருத்துவர் : இந்த மாளிகைக்குள் இருந்து தூரத்தைக் கணக்கிடுங்கள். உங்களுக்கு ஏதாவது எல்லைகள் தெரிகிறதா?
ஆய்வு நபர் 5 : இது முடிவிலி போல் எல்லைகள் இல்லாதிருக்கிறது. அமைதியாக அற்புதமாக இருக்கிறது.
மருத்துவர் : இப்போது நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
ஆய்வு நபர் 5 : இதை நான் முழுவதுமாக கொண்டாட விரும்பவில்லை. நான் இன்னும் முன்னேறி செல்ல எனக்கு விருப்பமில்லை. மேகி.. மேகி ..( மேகி இறந்து போனவரின் மனைவி)
மருத்துவர் : சிகாகோவில் நடந்த நிகழ்வுகள் உங்களை இன்னும் பாதிக்கிறது என்பதை நான் அறிவேன். இந்த பாதிப்பு உங்களை ஆன்ம உலகுக்குள் தொடர்ந்து செல்ல முடியாதவாறு தடுக்கிறதா?
ஆய்வு நபர் 5 : (அமர்ந்திருந்த நபர் இருக்கையில் இருந்து எழ முயற்சிக்கிறார்) சிறப்பு... இதோ என்னுடைய வழிகாட்டி வருகிறார்.. அவருக்கு எனக்கு என்ன தேவை என்பது நன்றாகவே தெரியும்
மருத்துவர் : உங்களுக்கும் உங்கள் வழிகாட்டிக்கும் இடையே என்ன உணர்ச்சிகள் வெளிப்படுகிறது?
ஆய்வு நபர் 5 : நான் எனது வழிகாட்டியிடம் என்னால் தொடர்ந்து போக முடியாது எனக் கூறுகிறேன். மேகியும் என்னுடைய குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவர் : அதற்கு உங்கள் வழிகாட்டி என்ன பதில் சொல்கிறார்?
ஆய்வு நபர் 5 : அவள் என்னை ஆறுதல் படுத்த முயற்சிக்கிறாள். நான் மிகவும் வேதனையாக உணர்கிறேன்.
மருத்துவர் : நீங்கள் அவளிடம் என்ன சொன்னீர்கள்?
ஆய்வு நபர் 5 : நான் அவளிடம், ஏன் எனக்கு இவ்வாறு நடக்க விட்டாய்? நீ என்னை என்னென்ன சோதனைகளுக்கும் வலிகளுக்கும் ஆட்படுத்தி விட்டாய்? அதுமட்டுமில்லாமல் இப்பொழுது நானும் மேகியும் சேர்ந்து இருக்காதவாறு என்னை அவளிடம் இருந்து பிரித்தும் விட்டாய்? ஏன் எனக்கு இப்படி செய்தாய்? என்று கேட்டேன்
மருத்துவர் : உங்கள் வழிகாட்டி என்ன செய்கிறார்?
ஆய்வு நபர் 5 : அதற்கு அவள், நீ சிறப்பாக செயல்பட்டாய். உன் வாழ்வு அதற்குரிய வழியில் மிகச் சரியாக சென்றது என்று சொல்கிறாள்.
மருத்துவர் : நீங்கள் அவள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஆய்வு நபர் 5 : என்னுடைய மனதில் தகவல்களைப் பெறுகிறேன். என் குடும்பம் நான் அவர்களோடு இல்லாத உண்மையை ஏற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் சிறப்பாக கடந்துப் போகிறதை காண்கிறேன். நாங்கள் அனைவரும் மீண்டும் சந்திப்போம்.
மருத்துவர் : சரி, இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள்?
ஆய்வு நபர் 5 : நான் மன நிம்மதியாக உணர்கிறேன். இப்பொழுது நான் தொடர்ந்து செல்வதற்கு தயாராக இருக்கிறேன்.
இந்த ஐந்தாவது ஆய்வு நபரின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் முன்பு நான் இங்கு அவர் குறிப்பிட்ட பனிக்கட்டி மாளிகையை பற்றி சொல்ல வேண்டும். என்னுடைய மனவசிய ஆய்வுக்கு உட்பட்ட பல நபர்கள் தங்களுடைய கற்பனைகளில் கட்டிடங்களையும் அல்லது மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறைகளையும் அல்லது மாளிகைகளையும் கண்டதாகக் கூறுகிறார்கள். அவரவரின் உலக அனுபவத்திற்கு ஏற்ப அந்த காட்சிகளின் உருவாக்கம் இருக்கிறது. மனவசிய நிலையில் அவர்கள் சொல்வது கற்பனைகள் இல்லை ஏனெனில் மனவசிய நிலையில் கற்பனையாக ஒரு விஷயத்தை புனைக்க இயலாது.
ஒரு ஆன்மா ஆன்ம உலகில் நுழைந்ததும் இம்மாதிரியான காட்சிகளை காண்பதற்கும் அவருடைய வாழ்விற்கும் தொடர்பு இருக்கிறது.‌ ஒரு ஆன்மா தனது உலக வாழ்வில் தன்னால் மறக்க முடியாத நினைவுகளிலிருக்கும் வீடு, பள்ளி, தோட்டம், மலை, கடற்கரை என அதனால் மறக்க முடியாத இடத்தை ஆன்மீக சக்தி அதனுடன் தொடர்பு கொள்ள காட்சியாக்குகிறது. நாம் இந்த உலகத்தில் பெறும் நினைவுகள் எதுவும் அழிவதில்லை. பிறப்பின் போது எவ்வாறு ஆன்மாவின் நினைவு நம் ஆழ்மனதில் புதைபட்டு இருக்கிறதோ அதேபோன்று இந்த உலகத்தில் நாம் பெற்ற அனுபவங்களும் காட்சிகளும் நினைவுகளாக அழியாது நம் மனதினுள்ளே தான் புதைந்து இருக்கிறது.
மனவசியத்துக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் ஆன்மாக்கள் காணும் காட்சிகளை விவரிக்கும் போது உண்மையில் நான் அதை மிகவும் ரசிக்கிறேன். மனிதர்கள் உலக வாழ்வு முடிந்து மீண்டும் இந்த ஆத்ம உலகத்தில் ஆன்மாவாக வரும் போது, காட்டு பூக்கள் மலர்ந்த இடங்களாக, உயரமான கோபுரங்கள் தூரத்தில் தெரிவதாக, அல்லது ஒரு தெளிந்த வானத்தில் வானவில்லை காண்பதாக காட்சிகளை விவரிப்பார்கள். ஒவ்வொரு பிறப்பிற்குப் பின்னும் இந்த ஆன்மாக்கள் ஆன்ம உலகை காணும் காட்சிகளில் பெரிதாக வித்தியாசங்கள் இருப்பதில்லை ஆனால் அதை விவரிப்பதில் தான் ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசங்கள் இருக்கிறது. மன வசியத்துக்கு ஆட்படுத்தப்பட்ட நபர் இந்த ஆத்ம உலகின் புறத்தோற்ற விஷயங்களை விவரித்த பின்பு ஆன்ம உலகம் எப்படி இயங்குகிறது என்பதை விவரிக்கையில் அவர்களுடைய அத்தனை வார்த்தைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதில் வித்தியாசங்கள் இருப்பதில்லை.
நான் மேற்குறிப்பிட்ட ஆய்வு நபர் ஐந்து மனதளவில் இன்னும் உலகத்துடன் பிணைக்கப்பட்டவராக, தன்னுடைய மனைவி மேகியை உலகத்தில் விட்டு வந்த நினைவிலேயே இருக்கிறார். சில ஆன்மாக்கள் தாங்கள் சுமந்து வந்த எதிர்மறை உலக எண்ணங்களை விடுத்து ஆத்ம உலகில் அமைதி பெற சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
மனிதர்கள் ஒரு ஆன்மா அனைத்து விஷயங்களையும் இறப்பிற்குப் பின் அறிந்து அமைதிக் கொள்கிறது என்று நினைக்கிறார்கள்.‌ ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஒவ்வொரு ஆன்மாவும் அதை உணர்வதற்கான காலம் வேறுபடுகிறது. இந்த புரிதல் வருவதற்கு அந்த இறப்பு நிகழ்ந்த இடம், உலக வாழ்வோடும் உலக நினைவுகளோடும் அதற்குரிய நினைவுகளோடும் இன்னும் தொடர்பில் இருப்பது, அதிலிருந்து அது எப்படி மீண்டு வருகிறது என்பதை பொறுத்து வேறுபடும்.
நான், பெரும்பாலும் மனிதர்களின் கடந்த காலத்திற்கு அவர்களை ஆட்படுத்தும் போது மிக இளம் வயதிலேயே இறந்த நபர்களின் கோபத்தை காண முடிகிறது. அவைகளுக்கு பெரும்பாலும் தங்கள் அன்புக்குரியவர்களே விட்டுவிட்டு ஏன் உடனே வந்து விட்டோம் என்ற கோபம் இருக்கிறது. அவை இறப்பிற்கு தயாராகவில்லை. சில ஆன்மாக்கள் வருத்தத்தையும், சில ஆன்மாக்கள் தங்களுடைய உரிமையை பறிக்கப்பட்டதாகவும் உணர்கிறது.
ஒரு ஆன்மா இந்த உலகத்தில் தான் செய்ய வேண்டிய வேலையை பாதையில் விடுத்து வந்ததினால் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தால் இறந்த பின் அது காணும் முதல் நபர் அதனுடைய வழிகாட்டியாக இருக்கும். இந்த வழிகாட்டிகள் பெரிதும் வளர்ச்சி அடைந்த ஆத்ம குருக்கள். இவை இறந்துப் போன இளம் ஆத்மாவின் வெறுப்புணர்வை எதிர்கொள்ள பெரிதும் தயாரானவை. ஆய்வு நபர் ஐந்து இறுதியாக ஆத்ம உலகோடு பொருந்திப் போக தன்னுடைய வழிகாட்டியை அதற்கு உதவ அனுமதிக்கிறார். அதுவே அவரது ஆத்ம உலகின் தொடர் பயணத்திற்கு அவரை தயார்படுத்துகிறது.
எப்படி இருந்தாலும் இந்த ஆன்ம வழிகாட்டிகள், இறந்துப் போன ஆன்மா உலகின் நுழைவு வாயிலேயே ஒரு ஆன்மா தன்னுடைய உலக வாழ்வின் கர்ம பயன்களை, சரி தீமையை ஆராய்வதை அவை ஊக்கப்படுத்துவதில்லை. அதற்கென தனியான நேரமும் இடமும் ஆன்ம உலகில் இருக்கிறது. அதைப்பற்றி இனிவரும் பிந்தைய அத்தியாயங்களில் நான் விவரிக்கிறேன். இந்த ஆய்வு நபர் ஐந்தின் வழிகாட்டி ஆன்மா, இறந்து போன ஆத்மாவின் மனைவி, குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வினை அவருக்கு உணர்த்தி அவரைத் தொடர்ந்து பயணிக்க உதவுகிறது.
இறந்து போன ஆன்மாக்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் ஆன்ம உலகின் அதிசயங்களைக் கண்டு அவை முழுவதும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறது. மிகுந்த சந்தோஷத்துடன் அவை உலகத்தில் சுமந்து வந்த அனைத்து பொறுப்புகளையும் விடுத்து, முக்கியமாக உடல் வலியை விடுத்து வந்த சந்தோஷம் அவைகளிடம் காணப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்ம உலகில் பயணிக்கும் ஆன்மாவுக்கு அங்கே நிலவும் தெய்வீக அமைதி மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. இறந்தவுடன் அவை தனித்து விடப்படவில்லை, என்ற விழிப்புணர்வும் அவற்றின் உதவிக்கு யாருமில்லை என்ற எண்ணம் அவற்றுக்கு உடைப்படுகிறது.
கண்ணுக்கு புலப்படாத ஒரு அறிவார்ந்த ஆற்றல் நம்மை ஆத்ம நுழைவு வாயில் தாண்டி வழி நடத்துகிறது. புதிதாக ஆன்ம உலகில் நுழையும் ஆன்மாக்களுக்கு அந்த இடத்தை சுற்றி அலைவதற்கும், சுற்றி இருக்கும் விடயங்களைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கும் மிகக் குறைந்த நேரமே அனுமதிக்கப்படுகிறது. நம் ஆன்மாவின் வழிகாட்டிகள் நம் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் அனைவரும் அந்த நுழைவு வாய்களில் மிக அருகிலேயே நம்மை கண்டு கொள்ளவும், நம்மை அரவணைத்து நாம் சரியான இடத்தில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவும் அவர்கள் அருகிலேயே இருக்கிறார்கள். இறந்த உடனே நம்மால் அவர்களை உணர முடியும் ஏனென்றால் நாம் இறந்ததும் ஆன்மாவாக இந்த பயணத்தை தொடங்குவது அவர்களின் தலையீடே நமக்கு பெரிதும் உதவும்.
ஆன்ம வீடு வருதல்
நம்மை நோக்கி வரும் நமக்கு முன் இறந்து போன அன்புக்குரியவர்களின் ஆன்மாக்களை இறந்தவுடன் எதிர்கொள்வது மிக முக்கியம் என்றாலும் நாம் எவ்வாறு அவர்களை அறிந்து கொள்வது. நான் இந்த ஆன்மாக்கள் அனைத்திடத்தும் எழுப்பிய கேள்வி
“ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவை ஆன்ம உலகில் எப்படி காண்கிறது?”
இந்த கேள்விக்கு அனைத்து ஆன்மாக்களிடமும் ஒருமித்த கருத்தையே பெறுகிறேன். ஒரு ஆன்மா நிறை ஆற்றலாக பெருந்திரள் சக்தியாக தெரிந்தாலும் ஆன்மாவினால் மனித குண நலன்களை வெளிப்படுத்த இயலும். ஆன்மாக்கள் பெரும்பாலும் தங்களுடைய முந்தைய வாழ்வு அனுபவத்தைக் கொண்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும். ஒரு மனித தோற்றத்தை எடுப்பது என்பது ஆன்மாக்களுக்கு அதனுடைய அடிப்படை ஆற்றலில் உள்ள எண்ணிக்கையில் அடங்கா மனிதபிறப்பெடுத்த தோற்றங்களில் இருந்து ஒன்றை எடுத்துக் கொள்வது போன்று தான். நம்முடைய அடுத்த ஆய்வு நபர் ஆறில் இந்த ஆத்ம தோற்றத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆரா எனப்படும் நிறம் இருப்பதை பற்றி காணலாம்.
நான் ஆய்வு மேற்கொண்ட பெரும்பான்மையான ஆன்மாக்கள் ஆத்ம நுழைவுவாயிலில் முதலில் சந்திப்பது அவருடைய தனிப்பட்ட வழிகாட்டியை தான். ஆனால் வெகு சில சமயங்களில் நம்முடைய ஆத்ம தோழனை நாம் சந்திக்க நேரலாம். நம்முடைய வழிகாட்டிகளும் ஆத்ம தோழர்களும் ஒருவர் அல்ல.
ஒருவேளை ஒரு ஆன்மா தன்னுடைய முந்தைய பிறப்பின் உறவினர்களையோ உற்ற நண்பரையோ காண நேர்ந்தால் அந்த இடத்தில் அவருடைய வழிகாட்டி இல்லாதிருக்கலாம். ஒரு ஆன்ம வழிகாட்டி என்பவர் ஒரு ஆன்மாவின் மிக அருகிலேயே அவருடைய வருகையை கண்காணித்துக் கொண்டு இருப்பார். நான் அடுத்த நேர்வில் சந்திக்கப் போகும் ஆன்மா ஆன்மிக உலகின் நுழைவு வாயிலில் மிக நவீன ஆத்மா வழிகாட்டியாக, அந்த ஆன்மாவுடன் பல வகையான முந்தைய வாழ்வில் நெருக்கமான தொடர்பிலிருந்த ஆன்மாவாக இருக்கிறது.
ஆறாவது ஆய்வு நபரின் ஆன்மாவை சந்திக்கும் ஆத்ம நண்பன் அவருடைய தனிப்பட்ட வழிகாட்டியாக இல்லாதிருப்பினும் அவரை ஆன்ம உலகில் வரவேற்கவும், அன்பை வெளிப்படுத்தவும் அவருக்காக நுழைவு வாயிலில் நின்றிருந்ததார்.
மருத்துவர் : நீங்கள் உங்களை சுற்றி என்ன பார்க்கிறீர்கள்?
ஆய்வு நபர் 6 : நான் அப்படியே மிதக்கிறேன். என்னை சுற்றி வெள்ளை வெளேர் மணல் இருக்கிறது. நான் ஒரு பெரிய கடற்கரையின் கீழுள்ள குடை போன்ற பலவண்ண மேற்பரப்பு அனைத்தும் ஆவியாகி ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல்…
மருத்துவர் : அங்கே நீங்கள் யாரையாவது சந்திக்கிறீர்களா?
ஆய்வு நபர் 6 : நான் தனியாக இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் தூரத்தில் ஒரு ஒளி என்னை நோக்கி வருகிறது.. கடவுளே..
மருத்துவர் : என்ன அது ?
ஆய்வு நபர் 6: அங்கிள் சார்லி.. அங்கிள் சார்லி.. நான் இங்கு இருக்கிறேன்.. (சொல்லும்போது அவர் உணர்ச்சி மிகுதியில் சத்தமிடுகிறார்)
மருத்துவர் : இந்த குறிப்பிட்ட நபர் உங்களை ஏன் முதலில் சந்திக்க வருகிறார்?
ஆய்வு நபர் 6 : (மருத்துவரின் குரலை அலட்சியப்படுத்தி) அங்கிள் சார்லி.. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்..
மருத்துவர் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார்
ஆய்வு நம்பர் 6 : ஏனென்றால் என்னுடைய எல்லா உறவினர்களிலும் நான் அங்கிள் சார்லியை தான் அதிகம் நேசித்தேன். நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார் நான் அதிலிருந்து அவருடைய இழப்பிலிருந்து மீளவே இல்லை. (இந்த நபரின் முந்தைய முற்பிறப்பின் ஒரு பண்ணை வளர்ப்பில் தோட்ட பராமரிப்பில் அவர் வாழ்ந்திருக்கிறார்)
மருத்துவர் : உங்களுக்கு அது அங்கிள் சார்லி என்பது எப்படி தெரியும் அவருடைய புறத்‌ தோற்றம் எதாவது உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
ஆய்வு நபர் 6 : (ஆர்வ மிகுதியில் அந்த இருக்கையில் இருந்து எழ முயற்சிக்கிறார்) நிச்சயமா... அவரை நான் எப்பொழுதும் ஞாபகத்துல வச்சிருக்க மாதிரி.. ஜாலியா.. அன்பா கனிவா.. என் பக்கத்துல தான் இருக்காரு. (ஆய்வு நபர் சிரிக்கிறார்)
மருத்துவர் : சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?
ஆய்வு நபர் 6 : அங்கிள் சார்லி.. நான் எப்பவும் பாக்குற மாதிரி அதே மாதிரி குண்டா அப்படியே இருக்காரு..
மருத்துவர் : அவர் என்ன பண்றாரு?
ஆய்வு நபர் 6 : என் கைய புடிச்சிட்டு சிரிச்சிட்டே இருக்காரு ..
மருத்துவர் : அப்படின்னா அவருக்கு கை கால்னு மனுஷ ரூபத்தில இருக்காரா?
ஆய்வ நபர் 6 : (சிரிக்கிறார்) ஆமா ஆனா இல்ல… நான் காத்தில மிதக்கிறேன் அவரும் மிதக்கிறார் ..என் மனசுல அவர் அவரை வெளிப்படுகிறார்.. எனக்கு அது நல்லா புரியுது. அவருடைய கை என்னை நோக்கி நீளுது
மருத்துவர் : ஒரு ஆற்றலா இல்லாம அவர் ஏன் கைகள் மாதிரி ஒரு பொருளா உங்கள அணுகுறார்
ஆய்வு நபர் 6 : என்னை ஆறுதல் படுத்த என்னை வழிநடத்த. அந்த ஒளியை நோக்கி என்னை செலுத்த…
மருத்துவர் : நீங்க என்ன பண்றிங்க?
ஆய்வு நபர் 6 : நான் அவரோட சேர்ந்து போறேன். நாங்க ரெண்டு பேரும் எங்களோட தோட்டத்துல சந்தித்த நேரங்கள், நாங்க பகிர்ந்து கொண்ட விஷயங்களை சிந்தித்துக்கொண்டே போறோம் ..
மருத்துவர் : இந்த காட்சிகளை எல்லாம் நீங்க பார்க்கிற மாதிரி அவர் உங்க மனசில நினைவுகளை கடத்துகிறாரா?
ஆய்வு நபர் 6 : ஆமா எனக்கு அவரை நல்லா தெரியும். முற்பிறப்புல அவர தெரிஞ்சதுனால அவரை பார்த்து எனக்கு பயம் இல்லை. அவருக்கு நல்லா தெரியும். இந்த இறப்புனால நான் கொஞ்சம் பயந்து இருக்கேன் (ஆய்வ நபர் ஆறு ஒரு நான்கு சக்கர வாகன விபத்தில் இறந்திருந்தார் )
மருத்துவர் : அப்படினா ஒரு ஆன்மாவா எத்தனை சாவுகளை நம்ம முற்பிறப்பில பார்த்திருந்தாலும் நாம ஆத்ம உலகத்துக்குள்ள போகும்போது கொஞ்சம் பயமா தான் உணர்வோமா?
ஆய்வு நபர் 6 : இது பயம் இல்லை. கொஞ்சம் கவலையா இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் இது எனக்கு வேற மாதிரி இருக்கும். இந்த கார் ஆக்சிடென்ட் நான் எதிர்பாராத நேரத்துல நடந்திருச்சு. அதனால நான் இன்னுமுமே குழப்பமா தான் இருக்கேன்.
மருத்துவர் : அது சரி இன்னும் கொஞ்சம் தள்ளி நினைவுகளுக்கு போவோம். இப்ப அங்கிள் சார்லி என்ன பண்றாரு?
ஆய்வு நபர் 6 : அவர் நான் எங்க போகணுமோ அந்த இடத்துக்கு என்னை கூட்டிட்டு போறாரு?
மருத்துவர் : நான் ஒன்னு ரெண்டு மூணு சொல்லும்போது.. நாம அந்த இடத்துக்கு போயிடலாம் ஒன் டூ த்ரீ இப்ப என்ன நடக்குது சொல்லுங்க!
ஆய்வு நபர் 6 : (நீண்ட அமைதிக்கு பிறகு என்ன சுத்தி மத்த மக்கள் எல்லாம் இருக்காங்க.. அவங்க எல்லாமே ரொம்ப கனிவா என்னோட இணையறதுக்கு விருப்பமா என்னை அணுகறாங்க..
மருத்துவர் : நீங்க அவங்க பக்கத்துல போங்க. அவங்க உங்களுக்காக காத்திருக்கிற மாதிரி ஏதாவது எண்ணம் உங்களுக்கு தோணுதா?
ஆய்வு நபர் 6 : ஆமா ஆமா அப்படித்தான் ..(சொல்லும் போதே அவர் பதட்டமாகிறார்) நீங்க போகாதீங்க.. இல்ல வேண்டாம்
மருத்துவர் : இப்ப என்ன நடக்குது.. ?
ஆய்வு நம்பர் 6 ; (மிகுந்த ஏமாற்றமாகி) சார்லி என்ன விட்டு போறாரு? ஏன் அவரு என்ன விட்டு போறாரு?
மருத்துவர் : நான் இம்மாதிரியான சமயங்களில் ஆன்மாக்களை அமைதிப்படுத்தும் வார்த்தைகளை பேசாது அமைதியாக இருப்பேன். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்வோம்.) இப்பொழுது உங்கள் ஆழ்மனதை உற்றுப் பாருங்கள். உங்களுக்கு ஏன் சார்லி உங்கள விட்டு போறார்னு இப்ப தெரியணுமே?!
ஆய்வு நபர் 6 : ஆமா (கொஞ்சம் தளர்வாகி ஆனால் மன வருத்தத்துடன்) ஆமா அவரு வேற இடத்துல இருக்காரு. ஏன்னா நான் இருக்கிற இடத்தை விட அது வித்தியாசமானது. அவர் என்னை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வருவதற்காக மட்டும் இப்ப இங்க வந்தாரு!
மருத்துவர் : எனக்கு புரியுது அங்கிள் சார்லியோட வேலை உங்க ஆன்மாவை முதல் ஆளாக வரவேற்று உங்களை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வர்றது. நீங்க இப்ப ரொம்ப ஆறுதலா உணரீங்களா?!
ஆய்வு நபர் 6 : ஆமா அப்படித்தான்.. அதுக்குத்தான் அங்கிள் சார்லி என்ன இவங்களோட விட்டுட்டு போறாரு..
ஒரு வித்தியாசமான வழிமுறை இந்த ஆழ்ம உலகில் செயல்படுகிறது. நாம் இறந்தவுடன் நம் வாழ்வில் மிக முக்கியமான நபர்கள் நம்மை வரவேற்று நம்மை இந்த ஆத்ம உலகிற்கு கூட்டிக் கொண்டு வருவார்கள். என்னதான் அவர்கள் வேறொரு உலகில் வேறொரு உடலில் வாழ்ந்து வந்தாலும் நம்மை வரவேற்க அவர்கள் வந்து செல்கிறார்கள். இது இந்த ஆன்மா உலகில் செயல்படும் ஒரு வித்தியாசமான வழிமுறை. இதைப்பற்றி ஆறாவது அத்தியாயத்தில் தெளிவுற கூறுகிறேன். அத்தியாயம் பத்தில் ஒரு ஆன்மா தன்னுடைய திறனில் எவ்வாறு ஒரே சமயத்தில் பல உடல்களில் இயங்கும் அளவுக்கு எப்படி தன்னுடைய ஆற்றலை வகுத்துக் கொள்கிறது என்பதையும் பார்க்கலாம்.
ஆத்ம உலகின் நுழைவு வாயில் தாண்டி ஆன்ம உலகில் நுழையும் பொழுது ஆன்மாக்களுக்கு, தங்கள் உலகில் சுமந்து வந்த உடல் அளவிலான மனதளவிலான பாரங்கள் அனைத்தையும் இரண்டு காரணங்களுக்காக வெகுவாகவே குறைந்து விடுகிறது. முதலாவது நாம் இந்த உலகத்தில் நுழைவதற்கு முன்பு ஆன்ம உலகில் நாம் விட்டுச் சென்ற அமைதி, நேரான வழிமுறை இவைகளின் ஆதாரங்கள் நம்மை மிகவும் அமைதிப்படுத்துகிறது. இரண்டாவது நம் அன்புக்குரியவர்களை, நாம் மீண்டும் பார்க்கவே மாட்டோம் என்று இதுவரை நினைத்திருந்த இறந்து போன நம் அன்புக்குரியவர்களை பார்க்கும் போது நம்முள் ஏற்படும் அதீத தாக்கம் நம் மனபாரத்தையும் உடல் பாரத்தையும் குறைத்து விடுகிறது. அதற்கு இன்னொரு உதாரணம் ஆய்வு நபர் ஏழு

தொடரும்…
 
Back
Top