டேஜாவின் செசரா - Epi 3

Nilaprakash

Administrator
Staff member
அத்தியாயம் 3

கோல்ட் ததுசே திகைத்து நிற்க டேஜா செசரா பின்னிருந்து மீண்டும் கேள்வி எழுப்பினான்.

“தேர்டுஐ யின் கண்காணிப்பைத் தாண்டி நியூக்ளியர் மலர்களை எடுக்க எனக்கு நிபந்தனைகள் உண்டு”

டேஜா செசரா பிரமித்துப் போய் திரும்பினான்.

‘இவனைக் கவர்ந்து வந்ததாக நினைத்தால் தான் இவனை வைத்து அடையப் போகும் காரியம் வரை அறிந்து வைத்திருக்கிறானே. வியானி சொன்னது சத்தியமான வார்த்தைகள் டேஜாக்கள் மிகமிக ஆபத்தான உயிரிகள் தான். வியானிகளின் தடை சுவர் இல்லையென்றால் என்றோ இந்த வியனுலகு இவர்கள் கையில் சென்றிருக்கக் கூடும்’

கோல்ட் ததுசே தனது பதட்டத்தைக் குரலில் காட்டாது திரும்ப அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த டேஜா செசராவைப் பார்த்துக் கொண்டே அவன் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான் கோல்ட் ததுசே.

“சொல் உன் நிபந்தனைகள் என்ன?”

நீ எவ்வாறு அறிவாய்? உனக்கு ஒற்றர்கள் உண்டா என்ற கேள்விகள் இல்லாது நேரடியாக அவனது நிபந்தனைகளை வினவிய கோல்ட் ததுசேவின் முகப்பாவனையை கணிக்க முயன்றான் டேஜா செசரா.

“என் இனம் இனி அடிமை இனமாக நடத்தப்படக் கூடாது. தேர்டுஐயின் ஏழாவது கிரக நெட்டிமைகண் ரகசியக் குறியீடு எனது கைகளில் வேண்டும்”

டேஜாவின் நிபந்தனையைக் கேட்ட கோல்ட் ததுசே ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு பேசினான்.

“நீ கேட்பது எத்தகைய அதீதம் என்பதை அறிவாயா?” கோல்ட் கேட்க

“இந்த வியனுலகின் அழிவைத் தடுப்பதற்கு இந்த அளவு கூட நீ விலை கொடுக்கத் தயாராக இல்லையா என்ன?” என்று மறு கேள்வி கேட்டான் டேஜா. அதைக் கேட்டதும் கோல்ட் பெருமூச்சு விட்டுப் பேசினான்.

“டேஜா செசரா இது நான் மட்டும் முடிவெடுக்கும் காரியமில்லை. வியானிகளின் வியனுலகு தடை சுவர் உடைக்கும் தந்திரம் நீ கேட்கிறாய். நாங்கள் இந்த கிரகத்தின் ஆதிவாசிகளாக இருப்பினும் இன்றுவரை இந்த கிரகத்தை அழிவிலிருந்து காப்பவர்கள் வியானிகள். நீ கேட்பது அவர்களது சொந்த கிரகத்தின் இரகசியக் குறியீடு. அவர்களை மீறி அவர்களது கிரகத்தின் தடை சுவர் உடைக்கும் தந்திரத்தை வியானிகளின் பகையை சம்பாதித்து உனது கைகளில் தருவது இந்த கிரகத்தை நானே எனது கைகளில் அழிப்பதற்கு சமம்”

கோல்ட் ததுசே பேச டேஜா செசரா முறுவலித்தான்.

“மாதாய் இதுவரை உரைத்த அனைத்துக் கணிப்புகளையும் சொன்ன வியானிதபூத் உன் இனம் இந்த நூற்றாண்டில் வியனுலகை காப்பாற்றா விட்டால், வியனுலகு வியானிக்களால் அழியும் அதுவும் ஏழாவது கிரக வியானிக்களால் அழியும் என்பதை உரைக்கவில்லையா?”

கோல்ட் ததுசே கைகளை பிணைத்து அமர்ந்திருந்தான். உனக்கு எவ்வாறு தெரியும் என்ற கேள்வியை இம்முறை அவன் கேட்காது இருக்க மிகவுமே சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் டேஜா செசரா அதற்கான விளக்கத்தை அப்போதே அவனிடம் வெளிப்படுத்தினான்.

“கோல்ட் இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பாதுகாவலன் கோல்ட் ததுசேவிடம் கொடுக்கப்பட்ட அதே குறீயீட்டு கணிப்புகளும், வித்தைகளும் ஆசீவகமால் எனக்கும் டேஜா இனக்காவலனாக கொடுக்கப்பட்டது” டேஜா சொல்ல கோல்ட் ததுசே நம்ப முடியாத பார்வையில் அவனை நோக்கினான்.

டேஜா செசரா தனது கையில் கட்டி இருந்த ஒரு நூல் போன்ற இழையை எடுக்க அது உலோகத்துகளாக மாறி ஒன்றுடன் ஒன்று பெருகி ஒரு புத்தகமாக விரிய அதில் ஆசிவகம் என்ற கிரகங்களின் பாதுகாவலரும் இனங்களை பாதுகாத்து வழிநடத்தும் யுனிவெர்ஸ்ன் கோட் மேக்கர் அவனைத் தேர்ந்தெடுப்பது பதிவாகியிருந்தது. அழியும் தருவாயில் இருக்கும் எல்லா இனத்தவருக்கும் ஆசிவகம் மூலம் இரண்டு இரகசியக் குறியீடு கிடைக்கும். கோல்ட் ததுசேவுக்கு வழங்கப்பட்ட இரண்டு இரகசியக் குறியீடுகளில் ஒன்றை அவன் உடைத்து விட்டான்.

அதில் கோல்ட் இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் ஆபத்துதவி டேஜாக்கள் என்பது தெளிவாகியது. அழிவு வியானிக்களால் நிகழும் என்பதும் எழுதியிருந்தது. கோல்ட் ததுசே, டேஜா செசரா இருவருக்குமே அவர்களது தந்தையர்களிடமே ஆசிவகம் அளித்த குறியீட்டு முறைகளை வெளிப்படுத்தி இருந்ததால் தங்களது மகன்களை பெரும் புத்திசாலிகளாக ஆக்கி தங்கள் குழந்தைகளிடத்திற்கும் அதை கற்றுக் கொடுக்க வைத்திருந்தது. ஆசிவகத்தால் இந்த குறீயீட்டு முறை கிடைக்கப்பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த குறியீட்டை உடைக்க முடியாது போனால் ஆசிவகத்தின் அழியாமை சக்திக்கு தங்களை அர்ப்பணித்து அரூபமாக்கிக் கொள்வர்.

டேஜாவின் தந்தை கண்ணுக்குத் தெரியாத சக்தியாக உருமாற்றப்பட்டு செசராவை இந்த பயணத்திற்காகவே பயிற்சியளித்திருந்தார்.

“அப்ப உன்னுடைய தந்தையும் ஆசிவகத்தால் அழியாமைக்குள் ஒன்றாகி விட்டாரா?” ததுசே கேட்க டேஜா செசரா ஆம் என்பதாகத் தலையாட்டினான். அந்த நொடி மீண்டும் அந்த இழை கயிறாக மாறி அவன் கைகளுக்குள் வந்தடைந்தது.

“எனக்கு ஆலோசிக்க சிறிது கால அவகாசம் வேண்டும்” கோல்ட் சொல்ல டேஜா செசரா தலையாட்டினான்.

“தாராளமாக எடுத்துக் கொள் கோல்ட் ஆனால் ஆசுவீகம் உதவி நம் இருவருக்கும் மட்டும் கிடைத்திருக்காது. நம்மால் யாருக்கு அழிவு என்பதை இங்கிருக்கும் எந்த அடிமை, ஆதிக்க இனத்திற்கு ஆசுவீகம் குறீயீடாகக் கொடுத்திருக்கலாம். நீயும் நானும் இதுவரை அதை மறைத்து வெளியே சொல்லாது இருப்பது போல் அவர்கள் இருக்கலாம். குறீயீட்டை பெற்று அதை அவர்கள் உடைத்து விட்டார்களா? என்பது தெளிவாகும் முன் நான் சகல உபகரணங்களோடு வெளியேற வேண்டும். முக்கியமாக நீ ஆசுவீகத்தின் இரகசியக் குறீயிட்டை உன்னுடன் இருக்கும் மற்ற மூவர் உடைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்” டேஜா செசரா சொல்ல கோல்ட் ததுசே அவனை வெளியேற பணித்தான். மாஜின்கள் இருவர் அவனை அழைத்துச் செல்ல கோல்ட் ததுசே அவன் சொல்லிச் சென்ற விடயங்களை அசை போட்டப்படியே அமர்ந்திருந்தான். வியானி மாதாய் முன் நிற்கையில் மனதின் எண்ணங்களை ஒளிக்க இயலாது என்பதால் மற்ற மூவரையும் அனுப்பி இருந்தான் கோல்ட் ததுசே.

‘தான் குறீயீட்டை உடைத்த வரை டேஜா செசராவே வியனுலகை மீட்கப் போகும் வீரன். ஆனால் தன் இன அழிவின் குறீயீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் இரண்டு இனம் எது வியானிகளா? தெளிகளா..?’ மற்றொரு குறியீட்டை ‌உடைக்க முடியாது கோல்ட் ததுசே தடுமாறினான்.

‘குறியீட்டைப் பெற்று விட்டதால் தான் டேஜாக்களை எதிர்க்கிறானா? வியானிதபூத் நம்மிடம் எதை மறைக்கிறான்? மாதாய் எல்லாவற்றையும் கணித்து சொல்லி விட்டால்..?’ கோல்ட் ததுசே மாதாயிடம் எதிர்காலம் பற்றி கேட்கப் போயிருக்கும் மூவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

ஒ’மாதாய் வியானிகளுக்கு ஆதரவாக ஏதாவது செய்யலாம் ஆனால் வியனுலகின் அழிவை மாதாய் நிச்சயம் அனுமதிக்கப் போவதில்லை’ கோல்ட் ததுசே சிந்தனையில் ஆழ்ந்திருந்த அதே சமயம் தட்டையான நீலநிற வானூர்தி ஒன்றில் நின்றுக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்த தெளி லேப் வியானி தபூத்திடம் சந்தேகம் கேட்டான்.

“வியானி தபூத் மாதாயின் கணிப்பு இன்று சொல்லப்படுமா? நாம் அவர் முன் போக அனுமதி உண்டா?”

தெளியின் கேள்விக்கு பதில் சொல்லாது வியானி தபூத் முன்னே தெரிந்த செந்நிற மலையை வெறித்துக் கொண்டிருந்தான்.

மாஜின் பிரவுன் குரலை உயர்த்தினார்.

“வியானி தெளியின் கேள்விக்கு பதில் இல்லையா?”

தெளி லேப்பின் குரல் இருகுரலாக மெலிதாக ஒலித்தததால் கவனம் சிதறாதிருந்த வியானி தபூத் மாஜின் பிரவுன் குரலில் தலையாட்டினான்.

“உத்தரவு வாங்கியாயிற்று! ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள். இன்று மட்டுமே வியானி மாதாய் கணிப்பை கேட்க இயலும். அந்த தியான அதிர்வலையில் மூன்று கணிப்புகளை மட்டுமே கேட்க இயலும். கவனம் ”

அவன் சொல்ல சொல்லவே செந்நிற மலைமுகட்டில் நீலநிற காற்றுப்படலம் சூழ அவர்கள் வந்த தட்டையான வானூர்தி தரையிறங்கியது. அவர்கள் கால்கள் தரையில் பட்டதும் அறுங்கோன வடிவிலான கண்ணாடி ஓடுகள் கீழ்பரவ மூவரும் நடந்தனர். தெளி லேப் மீண்டும் சந்தேகத்தைக் கிளப்பினான்.

“கோல்ட் ததுசே எதற்காக இந்த சந்திப்பைத் தவிர்த்தான்? மாஜின் உங்களிடம் ஏதாவது காரணத்தைப் பகிர்ந்துக் கொண்டானா?”

“இல்லை தெளி லேப் ஆனால் எனக்குமே அவன் டேஜாக்களின் ஆதரவை நாடுவது பிடித்தமில்லை” மாஜின் பிரவுன் தன் மனதை வெளிப்படுத்த வியானி தபூத் முக்கோண வடிவ நுழைவாயிலை அடைந்திருந்தான். அவர்கள் அந்த வாயிலில் நுழைந்ததும் கண்ணாடி பாலம் மறைய சில அதிர்வலைகளும் ஒலிகளும் கேட்கத் தொடங்கியது.

அந்த அதிர்வலைகள் அவர்களை மனதின் சமநிலைக்கு அழைத்துச் செல்ல வியானி தபூத் தனது மனச்சக்தியால் வியானி மாதாயிடம் அவர்களை கூட்டிச் சென்றான்.

ஒரு பெரிய பீடத்தில் வியானி மாதாய் வீற்றிருக்க அவரைச் சுற்றி ஆக்டோபஸ் போன்ற உருவங்கள் வெள்ளைப் படலங்களாக அலைந்துக் கொண்டிருந்தது. மூவரும் அவர் முன் மண்டியிட வியானி மாதாய் அவர்களைப் பார்த்ததும் கண்களை இறுக மூட அவர் முன்னே இருந்த நீர்படலத்தில் மாதாயின் உருவத்தைப் பார்த்து பேசத் தொடங்கினான் வியானி தபூத்.

“எங்கள் வியானி இன மூத்தோர் குல மாதாயிக்கு எங்கள் வணக்கங்கள நாங்கள்..”

வியானி தபூத் மேலும் தொடர்வதற்கு முன் மாதாயின் குரல் வெளிப்பட்டது.

“நீங்கள் மூவரும் வந்த செய்தி அறிவேன். வராதவன் சூல் கொண்ட எண்ணமும் அறிவேன். வியனுலகைக் காக்கும் வீரன் உங்களிடம் வந்து விட்டான்”

அவர் சொன்னதும் மாஜின் மிகப் பணிவுடன் பேசினார்.

“ஆனால் மாதா வியனுலகு காக்கப்படும் போது அழியப் போகும் இனம் ...”

“அதை உங்களை சேவிக்கப் போகும் வீரனே தேர்ந்தெடுப்பான்“

தெளி லேப்பின் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. தெரிந்த ஒன்றையே புரியாத வார்த்தைகளில் பேசி…. தெளிலேப் நினைக்க நினைக்கவே மாதாய் பேசினார்.

“தெளிலேப் நீ என்னை சந்தேகித்ததால் இதோ உனக்கான என் வெளிப்பாடு. உன் இனம் பற்றி ஆசுவீகம் உரைக்கும் குறீயீட்டை இன்றே நீ பெறுவாய். ஆனால் அதை உடைக்கும் முன் அது உன் கை விட்டுப் போகும் ”

வியானி மாதாய் சொல்ல வியானி தபூத் துணுக்குற்றான். வியானி மாதாய் கணிப்பு இனி இரு முறை தான் கிடைக்கும். அவரது கணிப்பு இனி இரு முறை மட்டுமே பெற முடியும் அதுவும் கால நிலை கிரக நிலை அதிர்வலைகள் உயிர்சக்தியிடம் அவர் தொடர்பு கொள்ளும் பொன்னான நொடிகளாக வெள்ளை ஒளி அவரது தலை மேல் படர்ந்தது. வியானி தபூத் சுதாரித்தான்.

“மாதாய் வியனுலகை காக்கப் போகும் மாவீரன்”

“டேஜா செசரா ..அவன் பெயர் டேஜா செசரா… வியனுலகின் ஈடுஇணையில்லா மாவீரன்… உங்கள் ஆதிக்க இனத்தில் ஓரினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கப் பிறந்தவன்”

அதைக் கேட்டதும் தெளி லேப் துணுக்குற்று பேசினான்.

“டேஜா செசராவை இன்றே இங்கேயே நாங்கள் கொன்றுப் போடுகிறோம் மாதாய். அதன் பின் அடுத்த நூற்றாண்டில் ஒரு டேஜா தோன்றும் வரை வியனுலகு நிலை நிற்க நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்”

வியானி தபூத் சொல்ல மாதாய் சிரித்தார்.

“டேஜா செசரா வியனுலகில் இருந்து புறப்பட்டு வெளியேறி நாழியாகிறது தபூத்.”

வியானி மாதாய் சொல்ல சகல ஆயுதங்கள் சகிதமாக விண்வெளி ஊர்தியில் டேஜா செசரா வியனுலகின் கண்ணுக்கு புலப்படாத சுவரை கிழித்துக் கொண்டு செல்வது தெரிய வியானி தபூத் திகைப்படைந்து நோக்கினான்.

‘வியானிகளின் சுவரை உடைத்தெறிபவனே அவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க வல்ல ஆளும் சக்தி படைத்த மாவீரன்’ தன் இனத்தின் ஆயிரமாயிரம் ஆண்டு கால சொல்லாடல் நினைவு வர வியானி தபூத் பேச்சற்று நின்றிருக்க

தெளி லேப் அவசரப்பட்டு மூன்றாவது கேள்வி கேட்டான்.

“தெளி லேப் இனத்தினை அழிக்கப் போவது டேஜாவா?”

“இல்லை உன் இனத்தின் எதிரி உன்னோடு இன்று உறவாடும் நண்பர்களில் ஒருவனே” அதை சொல்ல சொல்லவே வெள்ளை ஒளி மறைய வியானி மாதாய் முன் கண்ணாடி படலம் அறுங்கோண வடிவில் பரவ சற்று நேரத்தில் அங்கே வெறும் நீலநிற புகை மட்டுமே இருக்க வியானி மாதாய் மறைந்திருந்தார். அவர்கள் மீண்டும் நுழைவுவாயிலுக்கு வந்திருந்தனர்.

தெளி லேப் போன்ற முட்டாளை தன்னுடன் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்த கோல்ட் ததுசேவின் வஞ்சம் வியானிக்கு புரியத் தொடங்கியது. வியானிக்களின் அழிவு கோல்ட்களாலா டேஜாக்களாலா வியானி தபூத் முன் பூதாகரமான கேள்வி எழ ஆசுவகம் குறீயீடு ஒன்று மட்டுமே அதற்கு பதிலளிக்கக் கூடும். ஆனால் ஆசுவீகம் வியானிக்களிடம் இன்னும் வெளிப்படவில்லையே?! வியானி தபூத் நினைக்க வியானிக்களின் ஆதிகிரகமான ஏழாம் கிரகத்தில் ஒரு சிறுவனின் முன் வெள்ளைப் படலம் தெரிய அதில் தெரிந்த உருவம் தனது கையை நீட்டி அந்த சிறு வியானியின் நீண்ட உறிஞ்சுக் குழலில் ஒரு பச்சை கறுப்பு வண்ண நிற மாறும் சதுர வடிவ பெட்டியை வைத்தது. அவன் அதை விளையாட்டுப் பொருள் என எண்ணி தனது எட்டு கைகளால் பிடித்து பிடித்து விளையாட

“வியானி வெள்ளி வா இங்கே..” அவனது தாய் நீரிலிருந்து அழைக்க வெளிர் மஞ்சள் நிற நீரில் சென்று கலந்தான் ஏழாம் கிரக வியானிக்களின் இளவரசனான வியானி வெள்ளி. ஆசுவீகம் தனது வெள்ளைப் படல காற்றை மறைத்து மேலே செல்லத் தொடங்கினார்.
 

Attachments

  • IMG_20240826_150807.jpg
    IMG_20240826_150807.jpg
    421.6 KB · Views: 0
  • _e6fa86d3-19da-4499-80d2-2e4e51bfc6ab.jpeg
    _e6fa86d3-19da-4499-80d2-2e4e51bfc6ab.jpeg
    130.9 KB · Views: 0
  • IMG_20240904_175154.jpg
    IMG_20240904_175154.jpg
    117.4 KB · Views: 0
  • IMG_20240904_175131.jpg
    IMG_20240904_175131.jpg
    327.9 KB · Views: 0
Back
Top